திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அரசு கலைக்கல்லூரியில், கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு வேலைக்குச் சென்று திரும்பியவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். அங்கிருந்து 45 வயது மதிக்கத்தக்க ஒருவரும், சிங்காரக்கோட்டையைச் சேர்ந்த 44 வயது மதிக்கத்தக்க ஒருவரையும், 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.
அப்போது சிங்காரக் கோட்டையைச் சேர்ந்தவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இவர், பணி நிமித்தமாக கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்குச் சென்று விட்டு திருச்சி வரை லாரியில் வந்துள்ளார். அங்கிருந்து காவல்துறையினர் அனுமதிக்காததால், திருச்சியில் இருந்து திண்டுக்கல்லுக்கு நடந்து வந்துள்ளார்.
இதனிடையே கடந்த 3 நாட்களுக்கு முன்பு இவருக்கு கரோனா வைரஸ் தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், கரோனா வைரஸ் பாதித்த நபர் மருத்துவமனையில் இருந்து காணாமல் போனதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கேட்டபோது, ஒரு தரப்பினர் அவர் மருத்துவமனையிலிருந்து தானாக வெளியே சென்றதாகக் கூறுகின்றனர்.
ஆனால் மருத்துவமனை ஊழியர்கள் கரோனா பாதித்த நபர் காலை உணவு உண்ணாமல் வந்ததால், டீ குடிக்க செல்வதாகக் கூறிவிட்டு வெளியே சென்றார் எனக்கூறுகின்றனர். இதுதொடர்பாக இணை இயக்குனர் பூங்கோதையைத் தொடர்பு கொள்ள பலமுறை முயன்றபோதும், அவர் இச்சம்பவம் தொடர்பாக பதிலளிக்கவில்லை.
கரோனா பாதித்த நபர் ஒருவர் டீ குடிக்க வெளியே சென்று திரும்பியதாக எழுந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்குள்ளான நபர் எவ்வாறு வெளியே சென்று டீ குடிப்பதற்கு அனுமதிக்கப்பட்டார் என்ற கேள்வியும் பரவலாக எழுந்துள்ளது.