திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி, ஆடலூர் உள்ளிட்ட கிராமங்களில் பணப்பயிரான மிளகு அதிகளவில் விவசாயம் செய்யப்படுகிறது. இப்பகுதிக்கு பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் வந்து விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்கின்றனர்.
கேரளா மாநிலம் கஞ்சிராபள்ளியைச் சேர்ந்த இஸ்மாயில் என்பவர் சென்ற இரண்டு மாதங்களாக இங்குள்ள விவசாயிகளிடம் மிளகு வாங்கி உரிய முறையில் பணம் செலுத்திவந்துள்ளார்.
இதனை நம்பி 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ரூ.2 கோடி மதிப்பிலான மிளகு மூட்டைகளை அவருக்கு கடனாக வழங்கியுள்ளனர். இதற்குரிய பணத்தை இஸ்மாயில் காசோலையாக கொடுத்துள்ளார். ஆனால் அதில் பணமில்லை என வங்கித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள் அவரிடம் தொடர்புகொண்டு கேட்டதற்கு கொலைமிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து திண்டுக்கல் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நேரில் புகார் மனு அளித்தனர்.
இதையும் படிங்க: திரைப்படம் தயாரிக்க போவதாக கூறி மோசடி: தயாரிப்பாளரை கைது செய்த போலீஸ்