திண்டுக்கல் மாநகராட்சியில் மொத்தம் 48 வார்டுகள் உள்ளன. இங்கு சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்துவருகின்றனர். தற்போது மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு காரணமாக மாநகராட்சிக்குள்பட்ட காளிமுத்து பிள்ளை சந்து, பழனி ரோடு, நரிமேடு, மேட்டுப்பட்டி உள்ளிட்ட முக்கிய இடங்களிலும் வைரஸின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
மேலும் மக்கள் அதிகளவில் நடமாடும் பகுதியான காளிமுத்து பிள்ளை சந்து பகுதியில் தற்போதுவரை 10க்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இப்பகுதியில் மொத்த மளிகைக் கடைகள், தனியார் மருத்துவமனைகள், வங்கிகள், பெட்ரோல் பங்க் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் இப்பகுதியில் உள்ளதால் பொதுமக்களின் நடமாட்டமும் அதிகம் உள்ளது.
இதனால் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் நகராட்சி நிர்வாகம் சார்பில் அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, மூடப்பட்டது. இதனிடையே நகரின் மத்திய பகுதிகளும் தொடர்ந்து முடக்கப்பட்டுவருவதால் திண்டுக்கல் மக்களிடையே பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.