திண்டுக்கல் சரகக் காவல் துறை மற்றும் அலையன்ஸ் நிறுவனமும் இணைந்து மனிதக்கடத்தல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தின. திண்டுக்கல் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நடந்த இந்தக் கருத்தரங்கில் திண்டுக்கல் சரகக் காவல் துறை துணைத் தலைவர் முத்துச்சாமி, திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியா, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த காவல் துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய முத்துச்சாமி, "திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் குழந்தைக் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தைக் கடத்தலைத் தடுக்க காவல் துறையினர், குழந்தைகள்நல அமைப்பினருடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும்.
அதேபோல் குழந்தைக் கடத்தல், மனிதக்கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீதான சட்ட நடவடிக்கைகளில் காவல் துறையினர் மெத்தனமாக இருக்கக் கூடாது. மேலும் குழந்தையைப் பணத்திற்காக விற்பனை செய்வது சட்டப்படி குற்றம் என்பதால் இவ்விஷயத்தில் காவல் துறையினர் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து திண்டுக்கல்லில் காணாமல்போன இரண்டு சிறுமிகளை மீட்ட செம்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சரவணகுமாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.