திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி பகுதியிலுள்ள காவல் நிலையம் எதிரில் காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்களை பிடித்து, உரிய ஆவணம் உள்ளதா என சோதனை செய்துள்ளனர். அவர்களிடம் உரிய ஆவணத்தை தலைமை காவலர் திருப்பதி என்பவர் கேட்டுள்ளார்.
ஆனால் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரில் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தலைமை காவலர் திருப்பதி சரமாரியாக குத்திவிட்டு, அங்கிருந்து இருவரும் தப்பி ஓடி உள்ளனர். அவர்களை விரட்டிச் சென்ற காவல்துறையினர் ஒருவரை மடக்கிப் பிடித்து விட்டனர். ஆனால் மற்றொருவர் காட்டுப் பகுதிக்குள் தப்பி ஓடிச் சென்றுள்ளார்.
இது குறித்து கன்னிவாடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளனர். மேலும்,டிஐஜி முத்துச்சாமி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியா ஆகியோர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று படுகாயமடைந்த காவலர் திருப்பதியிடம் நலம் விசாரித்தனர்.
காவலரை தாக்கிய சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியா உறுதியளித்துள்ளார்.
இதையும் படிங்க: கரோனா தடுப்புப் பணிகள் - முதலமைச்சர் நாளை நாகை பயணம்!