திண்டுக்கல்: மாங்கரைத் தெருவில் புதிதாக அமைக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு எதிராக பாஜகவினர் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் தனபால் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டனர்.
பின்னர் அவர்கள் மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனர். அப்போது அவர்களை ஹெச். ராஜா நேற்று (அக். 17) சந்தித்துப் பேசினார்.
பின்னர் செய்தியாளருக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, "கடந்த அக்டோபர் 2ஆம் தேதி கிராமசபைக் கூட்டத்தில் டாஸ்மாக் மதுபான கடையை அகற்ற வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இருப்பினும் மதுபான கடை அகற்றப்படாததால் போராட்டம் நடத்தப்பட்டது. 1967ஆம் ஆண்டுக்குப் பின் கருணாநிதிதான் மதுபான கடையைத் தமிழ்நாட்டிற்கு கொண்டுவந்தார். தற்போது வெளிநாட்டு மதுபான கடைகள் வந்துவிட்டன.
மதுபான கடைகளால் குடும்பத் தலைவர் குழந்தை பெற்றுக்கொள்ள முடியவில்லை. செயற்கை கருத்தரிப்பு மையம் அதிகரித்துள்ளது. மதுபான கடைகளை முழுவதுமாக மூட முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீட் ரத்துக்கு வாய்ப்பே இல்லை
திமுக தேர்தலில் கூறிய வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. நீட் தேர்வை ரத்து செய்துவிடுவோம் என திமுக கூறியது அவர்கள் சக்திக்கு அப்பாற்பட்டது. ஒன்றிய அரசே நினைத்தாலும் இனி நீட்டை ரத்துசெய்ய முடியாது. குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்பதாகச் சொன்ன வாக்குறுதி என்ன ஆயிற்று?" என்றார்.
சரக்கு மிடுக்குப் பேச்சுக்காரர்
அதிமுகவில் உள்ள குழப்பத்திற்கும், சசிகலா மீண்டும் அரசியலுக்குள் நுழைவதற்கும் பாஜக ஒரு அங்கமாக உள்ளது எனத் திருமாவளவன் கூறியது பற்றி செய்தியாளர் கேட்டதற்கு, தொல். திருமாவளவன் அவரே குழப்பத்தில்தான் இருப்பார், யார் அந்தத் திருமாவளவன் - சரக்கு மிடுக்குப் பேச்சுக்காரர் தானே, திருமாவளவன் ஒரு சமூக விரோதி எனக் கடும் விமர்சனத்தை முன்வைத்தார்.
இதையும் படிங்க: மகன் துரை வையாபுரிக்கு பதவி? - வைகோ சொன்ன பதில்