கிறிஸ்தவர்களின் மிக முக்கியமான விழாக்களில் ஒன்று ஈஸ்டர் ஞாயிறு. இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுவதை கொண்டாடும் விதமாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் இந்த விழாவை கொண்டாடுகின்றனர்.
மேலும் ஈஸ்டர் திருவிழா முடிவடைந்ததையடுத்து மறுவாரத்தில் பாஸ்கு திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இயேசு கிறிஸ்து வாழ்ந்த வரலாற்றினை தத்ரூபமாக நடித்து காண்பிக்கப்படுவதே பாஸ்கு திருவிழா. குறிப்பாக இதில் நடிக்கும் கதாபாத்திரங்கள் 108 நாட்கள் விரதம் மேற்கொண்டு நாடகத்தில் நடிப்பது வழக்கம்.
இதன்படி கடந்த வாரம் ஈஸ்டர் திருவிழா முடிந்ததையடுத்து நேற்று இரவு புனித வியாகுல அன்னை திருத்தலத்தில் பாஸ்கு விழா வெகுமர்சையாக நடைபெற்றது. இதில் இரவு முதல் அதிகாலை வரை இயேசு கிறிஸ்துவின் அற்புதங்கள் மற்றும் சிலுவைபாடுகள் காட்சிகளைத் தத்ரூபமாக நடித்து காண்பித்தனர்.
இதைத்தொடர்ந்து இறந்த இயேசுவின் உடலை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் வைத்து ஊர்வலமாக தேவாலயத்திலிருந்து பாஸ்கு மைதானம் வரை எடுத்துச் செல்லும் ‘தூம்பா’ நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் தங்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி இயேசு கிறிஸ்துவின் துதிபாடல்களை பாடி ஊர்வலமாக வந்தனர்.