திண்டுக்கல் மாவட்டம் பழனியில், தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக்குகள், கவர்கள் மற்றும் பிளாஸ்டிக் கப்புகள் உள்ளிட்ட பொருட்கள் தாராளமாக பயன்படுத்தப்பட்டுவருகிறது. பழனி அடிவாரம், பேருந்து நிலையம், மார்க்கெட் பகுதிகளில் உள்ள கடைகளில் மறைத்து வைத்து விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், பழனி நகராட்சி சுகாதாரத் துறை அலுவலர்கள் அனைத்து பகுதிகளிலும் உள்ள கடைகளை கண்காணித்து இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் அடிவாரம் ,சன்னதி வீதி, கிரி வீதி, காந்தி மார்க்கெட்,பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் நகராட்சி அலுவலர்களால் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்த கடை உரிமையாளர்களிடம் ஐம்பதாயிரத்திற்கும் அதிகமாக அபராதமும் வசூலிக்கப்பட்டது.