திண்டுக்கல்: காவல் துறையினரின் வாகன சோதனையில் 27 பெட்டிகளில் கடத்திவரப்பட்ட 1030 மதுபாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல்செய்யப்பட்டன.
செட்டிநாயக்கன்பட்டி இ.பி. காலனி பகுதியில் திண்டுக்கல் தாலுகா காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான முறையில் அங்கு நின்றுகொண்டிருந்த வேனை சோதனை செய்தனர்.
அப்போது அதில், அட்டைப்பெட்டிகளில் மதுபாட்டில்கள் மறைத்துவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. பின்னர் அந்த வாகனத்தை தாடிக்கொம்பு காவல் நிலையத்திற்கு கொண்டுசென்று வாகனத்தில் இருந்தவர்களிடம் காவல் துறையினர் விசாரணை செய்தனர்.
விசாரணையில் அவர்கள், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஜோதி ஹரிஹரன் (26), பள்ளிபாளையம் காமாட்சி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மோகன் (25) என்பது தெரியவந்து.
நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்றுப்பரவல் காரணமாக, ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில் மதுக்கடைகள் திறக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் இவர்கள் இருவரும் போலி இ-பாஸ் மூலமாக திண்டுக்கல் வந்து மதுபானங்களை வாங்கிச் சென்று நாமக்கல்லில் விற்பனை செய்யவிருந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து இளைஞர்களைக் கைதுசெய்த காவல் துறையினர் அவர்களிடமிருந்து, 27 பெட்டிகளில் இருந்த 1030 மதுபாட்டில்கள், கடத்தலுக்குப் பயன்பட்ட வேன் ஆகியவற்றைப் பறிமுதல்செய்தனர். தொடர்ந்து இளைஞர்கள் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: நான்கு மாதங்கள்: 7,241 லிட்டர் சாராயம் அழிப்பு