திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வழியாக மதுரைக்கு நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த ரோட்டில் லெக்கையன்கோட்டைக்கு உட்பட்ட சாலைப்புதூர் கிராமம் உள்ளது. இந்தப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பை, ஊரின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியின் சாலைப் பகுதியில் கொட்டப்பட்டு தீ வைக்கப்படுகிறது.
எரிக்கப்படும் குப்பையில் மக்காத குப்பையும் உள்ளது. இவை பிரித்தெடுக்கப்படாமல் அப்படியே தீயிட்டு எரிக்கப்படுவதால் ஏற்படும் கரும்புகை மண்டலம் சாலை முழுவதும் பரவுகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
இந்த குப்பை எரிப்பின் காரணமாக அந்தப் பகுதியில் வசிப்பவர்கள், சாலையில் கடந்து செல்பவர்களுக்கு முச்சுத்திணறல் ஏற்பட்டு வருவதை நமது ஈடிவி பாரத்தில் கடந்த 23.08.2019 அன்று செய்தியாக வெளியிடப்பட்டது.
மேலும் படிக்க: குப்பைகள் எரிப்பதால் பொதுமக்களுக்கு பாதிப்பு!
இந்த நிலையில், குப்பை எரிக்கப்படும் விவகாரம் தொடர்பாக ஒட்டன்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் நாகராஜனிடம் கேட்ட போது, விரைவில் இது குறித்து நடவடிக்கை மேற்கொண்டு குப்பையை அகற்றப்படும் என உறுதி அளித்தார்.
அதன் அடிப்படையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் ஜேசிபி இயந்திரங்கள் மூலமாக அந்தப் பகுதியில் குப்பை மேட்டுப் பகுதி அகற்றப்பட்டது.