திண்டுக்கல்: திண்டுக்கல் ஆர்த்தி திரையரங்கில் சித்தா திரைப்படம் இரண்டாவது வாரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இன்று(அக்.08) சித்தா படம் ஓடும் திரையரங்கிற்கு, தயாரிப்பாளரும் நடிகருமான சித்தார்த் சென்று ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.
தொடர்ந்து, நடிகர் சித்தார்த் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், "தமிழ்நாடு முழுவதும், சித்தா திரைப்படம் திரையரங்குகளில் இரண்டாவது வாரமாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. சமூக அக்கறையுடன் எடுக்கப்பட்ட சித்தா படம், குடும்பத்துடன் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.
ஒரு நடிகனாக சித்தா படம், என் முதல் படமாக கருதுகிறேன். சினிமாவில் 20 வருடமாக நடித்த சித்தார்த் வேறு, சித்தா படத்தின் சித்தார்த் வேறு. இந்தப் படத்தில் புதுமுக நடிகனைப் போல் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். நான் நடித்த எந்த படத்தின் சாயலும் இல்லாமல் புது நடிகனாக, ரொம்ப மரியாதை கொடுத்த படம் சித்தா படம்.
அடுத்த வாரம் முதல் பள்ளிகளில் மாணவ, மாணவிகள் மத்தியில் சித்தா படம் திரையிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பெற்றோர்கள் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும், குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பான படம் என்பதால், பள்ளிகளில் திரையிடப்படும்.
பள்ளிக் குழந்தைகளிடம் ஸ்மார்ட்போன் கொடுப்பதை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும். தனியாக இருக்கக்கூடிய மாணவர்களிடம் கண்டிப்பாக செல்போன் இருக்கக் கூடாது என்பதை படம் தெளிவாக விளக்கியுள்ளது. முதலில் குழந்தைகளிடம் பெற்றோர்கள் மனம் விட்டு பேச வேண்டும். அவர்கள் என்ன செய்ய ஆசைப்படுகிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு, அதற்கு ஏற்றார் போல் பெற்றோர்கள் செயல்பட வேண்டும்" இவ்வாறு கூறினார்.
இதையும் படிங்க: “அந்த வசனத்திற்கு நானே பொறுப்பு” - லோகேஷ் கனகராஜ்!