சென்னை: சட்டப்பேரவையில் இன்றையை (ஏப்ரல் 19) வினாக்கள் விடை நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஓ.பன்னீர்செல்வம் பேசும் போது,"திண்டுக்கல்லில் இருந்து குமுளி வரை செல்கின்ற சாலை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றம் செய்யப்பட்டு நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்காக அரசாணை போடப்பட்டது. அந்த வழித்தடத்தில் 9 புறவழிச்சாலைகள் இருக்கின்றன. 4 வழிச்சாலையாக மாற்ற அரசாணை பெறப்பட்டு, தனியார் நிறுவனமும் டெண்டர் எடுத்திருந்தது.
அந்த சாலை இரு வழிச்சாலையாக உயர்த்தப்பட்டு புறவழிச்சாலை போடப்பட்டுவிட்டது. ஆனால் நான்கு வழிச்சாலையாக போடப்படாததால் போக்குவரத்து நெரிசல் மிகுதியாக உள்ளது. இது இரு மாவட்டங்கள் மட்டுமில்லாமல் இரு மாநிலங்களை இணைக்கின்ற சாலையாக முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த சாலை மிகவும் அவசியமான சாலை. இதை 4 வழிச்சாலையாக மாற்றி தருவதற்கு அமைச்சர் முன்வர வேண்டும்" என வலியுறுத்தினார்.
இதற்குப் பதில் அளித்த அமைச்சர் எ.வ.வேலு, "உறுப்பினர் ஏற்கனவே முதலமைச்சராக இருந்தவர். துறையின் அமைச்சராகவும் இருந்தவர். அவருக்கு எல்லா விவரங்களும் தெரியும். தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச் சாலையாக மாற்ற வேண்டும் என்பது அவருடைய நோக்கமாக உள்ளது. அவருடைய கேள்வியை மையப்படுத்தி மத்திய அரசுக்கு கடிதம் எழுதி, திண்டுக்கல் - குமுளி சாலையை 4 வழிச்சாலையாக மாற்றுவது தான் சாலச்சிறந்தது. இதற்கான அனைத்து முயற்சியையும் அரசு மேற்கொள்ளும்" என்றார்.
இதையும் படிங்க: கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் சலுகைகள்: முதலமைச்சர் தனித்தீர்மானம்