திண்டுக்கல்: கொடைக்கானல் மலை பகுதியில் வனப்பகுதிகளை ஒட்டியுள்ள பகுதிகளிலும், மிகுந்த ஆபத்தான பகுதிகளிலும் டென்ட் அமைத்து சுற்றுலா பயணிகளை தங்கவைக்கும் கலாசாரம் தற்போது பெருகிவருகிறது.
இந்த ஆபத்தான கலாசாரம் காரணமாக சுற்றுலா பயணிகளின் உயிருக்கும், உடைமைக்கும் அச்சம் ஏற்படுகிறது. இதையடுத்து கடந்த சில நாள்களுக்கு முன்பு கூக்கால் பகுதியில் டென்ட் அமைத்தவர்கள் மீது (20 பேர்) நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதையடுத்து கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில் டென்ட் அமைக்கப்பட்டுள்ளதாக வந்த புகாரையடுத்து, கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், வட்டாட்சியர் சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர்.
அங்கு தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டு, சுற்றுலாப் பயணிகள் தங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தத் தற்காலிக கூடாரங்கள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு கைப்பற்றப்பட்டது.
டென்ட் கூடாரங்கள் அமைத்து தங்க வைக்கப்படுவது பற்றிய அறிவிப்புகள், யூ டியூப், இன்ஸ்டாகிராம் சமூக வலைதளங்கள் மூலம் விளம்பரம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. டென்ட் கூடாரங்கள் அமைக்கப்பட்ட இடத்தின் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் கூறுகையில், "கொடைக்கானல் மலைப் பகுதியில் டென்ட் அமைத்து சுற்றுலாப் பயணிகளை தங்க வைப்பது குற்றமாகும்.
அப்படி செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற கூடாரங்களில் தங்கும் சுற்றுலாப் பயணிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: 'காந்தி மியூசியம் புனரமைப்பு அறிவிப்பு- காந்திய ஆர்வலர்கள் மகிழ்ச்சி'