திண்டுக்கல்: அடிவாரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜீவானந்தம். இவருக்கும் அதேபகுதியைச் சேர்ந்த துர்க்கைவேலு என்பவருக்கும் இடையே கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு டாஸ்மாக் கடையில் தகராறு ஏற்பட்டது.
இதில், துர்க்கைவேலுவை, ஜீவானந்தம் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிவிட்டார். இது குறித்து துர்க்கைவேலு கொடுத்த புகாரின் பேரில் பழனி நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ஜீவானந்தத்தைத் தேடி வந்தனர்.
இந்நிலையில், ஜூலை 18ஆம் தேதி காவல் துறையினர், ஜீவானந்தத்தை பிடிக்கச் சென்றனர். அப்போது, காவல் துறையினரின் வருகையைக் கண்ட ஜீவானந்தம் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். அவரை காவல் துறையினர் துரத்தியபோது, ஜீவானந்தம் கீழே விழுந்ததில் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
கைதி தப்பி ஓட்டம்
இதனையடுத்து ஜீவானந்தத்தை கைது செய்த காவல் துறையினர், பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆரோக்கியம், தண்டபாணி என்ற இரண்டு காவலர்களளின் பாதுகாப்பில் இருந்த நிலையில், கைதி ஜீவானந்தம், நேற்று (ஜூலை 21) காவலர்கள் கண்ணில் மண்ணைத்தூவி விட்டு தப்பி ஓடிவிட்டார்.
காலில் முறிவு ஏற்பட்டு நடக்க முடியாத நிலையில் தவழ்ந்து தவழ்ந்து சென்றதாக அவரை கண்டவர்கள் கூறுகின்றனர். இதையடுத்து, உயர் அலுவலர்களுக்குத் தகவல் தெரிவித்த பாதுகாப்பு காவலர்கள் தப்பியோடிய ஜீவானந்தத்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: அரசு மருத்துவமனையில் கைதி மாயம்? - பரபரப்பு