திண்டுக்கல்: நத்தம் அருகே உள்ள புகையிலைப்பட்டியைச் சேர்ந்த ஜெயராஜ், வேளாங்கண்ணி தம்பதியருக்கு மூன்று மகள்கள், ஒரு மகன். மூன்றாவது மகள் ஜெயமணி, சிறுவயதில் இருந்தே ஜல்லிக்கட்டின் மீது தீராக்காதல் கொண்டிருந்தார். கணினியில் டிப்ளமோ பயிற்சி முடித்த ஜெயமணி, ஐல்லிக்கட்டு எந்த ஊரில் நடந்தாலும் அங்கு சென்று கேலரியில் அமர்ந்து வேடிக்கை பார்ப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.
ஒரு கட்டத்தில் தானும் ஜல்லிக்கட்டு மாடுகள் வாங்கி வளர்த்து போட்டியில் பங்கேற்க வேண்டும் என்று முடிவு செய்தார். இவர்களது குடும்பம் விவசாயத்தைப் பிரதானத் தொழிலாக செய்து வந்தனர். ஜல்லிக்கட்டுக் காளைகள் வாங்கி வளர்க்கும் அளவிற்குப் போதுமான வசதி இல்லை. ஆனால், அதற்காக ஜெயமணி தனது ஆசையை துறக்காமல் துரத்தினார். மாடுகளை வாங்குவதற்காக பெட்ரோல் பங்கில் வேலைக்கு சென்றார். அதில் தமக்கு கிடைத்த சம்பளத்தை சேமித்துவைத்து கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, இரண்டு ஜல்லிக்கட்டு கன்றுகளை சந்தையில் வாங்கி முறையாக வளர்த்து, கண்ணும் கருத்துமாக அவற்றை பராமரிக்கத் தொடங்கினார்.
அந்த ஜல்லிக்கட்டு காளைகளுக்கு காரி வெள்ளை, காரி கருப்பு எனப் பெயரிட்டு பாசத்துடன் வளர்த்து வந்தார். இவரது காளைகளை புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, திருப்பூர், கோயம்புத்தூர் மாவட்டங்களில் நடைபெற்ற பிரபலமான ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு அழைத்துச்சென்றார். களம்கண்ட ஜெயமணியின் இரண்டு காளைகளும் எந்த ஒரு காளையர்களின் பிடியிலும் சிக்காதவாறு, அவைகளுக்கு களத்திலேயே நின்று, தனது கண் அசைவிலும், விரல் அசைவிலும் சைகையை காட்டி, அவற்றை துள்ளி விளையாடச் செய்தார்.
இதனால் இவரின் காளைகள் களத்தில் எவரது பிடியிலும் சிக்காமல் நீண்ட நேரம் நின்று, விளையாடி ரசிகர்களின் ஆதரவையும், விழாக் குழுவினர்களின் பரிசுகளையும் அள்ளிவந்தன. எவரது பிடியிலும் சிக்காமல் சீறிப் பாய்ந்து வெற்றியுடன் வெளியே வந்ததால் கட்டில், பீரோ, டிவி, சைக்கிள், தங்க காசு, வெள்ளி காசு உள்ளிட்டப் பல்வேறு பரிசுகளை வென்று வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளன.
தான் உயிருக்கு உயிராக நேசிக்கும் காளைகள் காரி வெள்ளையனும், காரி கருப்பனும் தற்போது வரக்கூடிய பொங்கல் பண்டிகையொட்டி நடத்தப்படும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை எதிர்நோக்கி காத்திருப்பதாக பெருமிதத்துடன் தெரிவித்தார், ஜெயமணி. மேலும் தனது காளைகளை ஜல்லிக்கட்டுக்குத் தயார் செய்யும் விதமாக தினமும் நீச்சல் பயிற்சி, நடைபயிற்சி, மண் குத்தும் பயிற்சி, சைகை பயிற்சி உள்ளிட்டப் பல்வேறு பயிற்சிகள் கொடுத்தும் தயார் செய்து வருகிறார்.
மேலும் இந்த காளைகளுக்கு தினமும் 300 ரூபாய் வீதம் மாதம் 9000 ஆயிரம் ரூபாய் செலவு செய்து வருவதாகவும் தெரிவித்தார். தனது மாடுகளைப் பராமரிப்பதற்காகவே தான் பணிக்கு செல்வதாகவும் அதன் மூலம் வரும் வருமானத்தை தனது காளைகளுக்கு மட்டுமே செலவிடுவதாகவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: 46th Chennai Book Fair: 46-வது புத்தகக் காட்சியில் வித்தியாசமான அரங்குகள்