திண்டுக்கல்: வத்தலகுண்டை சேர்ந்த பக்தர்கள் பழனி கோயிலுக்கு பாதயாத்திரையாக சென்றனர். அதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் குழந்தைகளும் பாதயாத்திரையாக சென்றனர். இன்று காலை பழனி அடிவாரம் தேவர் சிலை அருகே நடந்து சென்றபோது பாதயாத்திரையாக சென்றவர்களில் 10 வயதான சுசீந்திரன் என்ற சிறுவன் அருகிலுள்ள கடையில் தண்ணீர் பாட்டில் வாங்குவதற்காக சென்றான்.
அப்போது கடையில் இருந்த வயதான முதியவரிடம் 500 ரூபாய் நோட்டை கொடுத்த சிறுவன், 5 லிட்டர் தண்ணீர் கேன் ஒன்றை விலைக்கு வாங்கினான். அப்போது கடைக்காரர் சிறுவனிடம் வாங்கிய 500 ரூபாயை பெற்றுக்கொண்டு மீதித் தொகையினை வழங்கியுள்ளார். கடைக்காரர் கொடுத்த ரூபாய் நோட்டுகளில் செல்லாத ரூபாய் நோட்டுகள் இருப்பதாகவும்; அவற்றை மாற்றித் தரும்படியும் சிறுவன் கேட்டதை அடுத்து, ஆத்திரமடைந்த கடைக்காரர் சிறுவனின் கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது.
இதைக்கண்ட சிறுவனின் பெற்றோர் ஆவேசமடைந்து கடைக்காரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அருகில் இருந்த பொதுமக்களும் பெற்றோருக்கு ஆதரவாக கடைக்காரரிடம் தகராறில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகலறிந்து வந்த பழனி நகர் காவல் ஆய்வாளர் உதயகுமார் சிறுவனை தாக்கிய முதியவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார். தொடர்ந்து முதியவரை எச்சரித்த போலீசார், சிறுவனின் பெற்றோரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். பாதயாத்திரையாக வந்த சிறுவனை கடைக்காரர் ஒருவர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:சத்தியமங்கலத்தில் போக்கு காட்டும் கருப்பன் யானை.. வனத்துறையினர் திணறல்!