திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கீழ்மலை, பெருமாள்மலை, பேத்துப்பாறை ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்கப்படுவதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில், காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்குரிய வகையில் நின்றிருந்த ஒருவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில், அவர் பெரியகுளம் தேவதானபட்டியைச் சேர்ந்த பால்ராஜ் (48) என்பதும், கஞ்சா விற்பனை செய்துவந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, காவல் துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் அவரிடமிருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல்செய்யப்பட்டது.
தொடர்ந்து கொடைக்கானலில் கஞ்சா விற்பனை அதிகரித்துவருவதாகவும், இவ்வாறான குற்றச்சம்பவத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: பத்து கிலோ கஞ்சாவுடன் இளைஞர் கைது!