ஆந்திர மாநிலத்திலிருந்து திண்டுக்கல் வழியாக வெளி மாவட்டங்களுக்கு கஞ்சா கடத்த உள்ளதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இத்தகவலின் அடிப்படையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீவிர பரிசோதனையில் ஈடுபட உத்தரவிட்டார்.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்படையினர் மற்றும் காவல் துறையினர் வடமதுரை காவல் நிலைய சரகம் தங்கம்மாபட்டி சோதனைச்சாவடி அருகே சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் அங்கு வந்த வாகனத்தை சோதனையிட்டபோது கஞ்சா கடத்தலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கிருஷ்ணமூர்த்தி(28) சோனைமுத்து(31), பரணி (33), யுவராஜ் (33), ஜெயசங்கர்(24), ராகவன்(27), பாண்டியப்பன் (52) ஆகியோர்களிடமிருந்து 300 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்ந்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். இதனிடையே சிறப்பாக பணி புரிந்த தனிப்படையினர் மற்றும் காவல் துறையினரை திண்டுக்கல் சரக காவல்துறை துணைத்தலைவர் முத்துசாமி, திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி ப்ரியா பாராட்டு தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ரூ.50 ஆயிரம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 4 பேர் கைது