திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பிரகாசபுரம் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளி குழந்தைகள் படிக்கும் பள்ளி அருகே நுண்ணுயிர் குப்பை கிடங்கு அமைக்க கொடைக்கானல் நகராட்சி அதிகாரிகள் பணியினை மேற்கொண்டனர். இதனையறிந்த அப்பகுதி மக்கள் நுண்ணுயிர்குப்பை கிடங்கு அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர்.
இதனை தொடர்ந்து 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வத்தலகுண்டு பிரதான சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் குடியிருப்பு பகுதி அருகில் நுண்ணுயிர் குப்பை கிடங்கு அமைக்கப்பட்டால் பள்ளிக் குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு டெங்கு போன்ற தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கொடைக்கானல் போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். தற்காலிகமாக நுண்ணுயிர் குப்பை கிடங்கு அமைக்கும் பணி ஒத்திவைக்கப்பட்டதாக கூறியதன் அடிப்படையில் மக்கள் கலைந்து சென்றனர்.இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதித்தது.