பழனியை அடுத்த நெய்க்காரபட்டி கிராமத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதனை பழனி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார். போட்டியில் கலந்துகொள்ள மதுரை, தாராபுரம், திண்டுக்கல், உடுமலை, திருச்சி, மணப்பாறை, சிவகங்கை உள்ளிட்ட பல இடங்களிலிருந்து 400 காளைகள் கொண்டுவரப்பட்டன.
இதில் 250 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். வாடிவாசலில் காளைகளை அவிழ்த்துவிடுவதற்கு முன்பு கால்நடை மருத்துவர்கள் கொண்டு காளைகள் பரிசோதனை செய்யப்பட்டு வாடிவாசலுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அதேபோன்று மாடுபிடிக்க வந்த வீரர்களும், மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்ட பிறகே மாடுபிடிக்க அனுமதிக்கப்பட்டனர்.
வாடிவாசலிலிருந்து காளைகளை அடக்கியவர்களுக்கும் மாடுபிடி வீரர்களிடம் பிடிபடாமல் திமிறிச் சென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் கட்டில், பீரோ, தங்ககாசு, செல்போன் போன்ற பரிசுகள் வழங்கப்பட்டன.
ஜல்லிக்கட்டின்போது மாடு முட்டியதில் 15 பேர் காயமடைந்தனர். ஜல்லிக்கட்டைக் காண பழனி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஏராளமானோர் வருகை தந்திருந்தனர்.
இதேபோல் சாணார்பட்டியருகே உள்ள நத்தமாடிபட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் 400க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. ஜல்லிக்கட்டின்போது அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமலிருக்க 200க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: 'பலியான மாட்டின் உரிமையாளருக்கு தமிழ்நாடு அரசு இழப்பீடு வழங்க வேண்டும்'