திண்டுக்கல் மாவட்டம் பளையபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்தி (25). சென்ட்ரிங் வேலை செய்து வரும் இவர் ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள வெரியப்பூர் கிழக்கு மலை அடிவாரத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் ரவளிபிரியா, ஒட்டன்சத்திரம் துணை காவல் கண்காணிப்பாளர் அசோகன் ஆகியோர் இறந்தவரின் உடலை ஆய்வு செய்தனர். அப்போது இளைஞர் கார்த்தி மண்டையில் அடிபட்டு இறந்து கிடந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரது உடலை மீட்ட காவல்துறை, உடற்கூறாய்வுக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது.
மேலும், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் கிடைக்கிறதா என துப்புத் துலக்கினர். பின்னர் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சாத்தான்குளம் தந்தை-மகன் மரண வழக்கு: மூவரின் பிணை மனு தள்ளுபடி