திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகே பல்லாநத்தம் பகுதியில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்து வருவதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில், திண்டுக்கல் மது விலக்கு ஆய்வாளர் கவிதா தலைமையிலான காவல் துறையினர் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு சட்டவிரோதமாக மது பாட்டில்கள் தயார் செய்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, மது விற்பனை செய்த எட்டு பேரை காவல் துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து 1300 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து, வேடசந்தூர் பகுதியில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட 300 மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டு சார்பு நீதிமன்றத்தில் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவின்படி இன்று வேடசந்தூர் சார்பு நீதிமன்ற வளாகத்தில் (பொறுப்பு) மேஜிஸ்திரேட் முருகன் தலைமையில் மது விலக்கு ஆய்வாளர் கவிதா முன்னிலையில் பறிமுதல் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த 1600 மது பாட்டில்கள் அழிக்கப்பட்டன.
இதையும் படிங்க:சென்னையில் மேலும் மூன்று காவலர்களுக்கு கரோனா!