தமிழ்நாட்டில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த, தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வீட்டைவிட்டு யாரும் வெளியே வரக்கூடாது என காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், கொடைக்கானல் அருகே கீழ்மலைப் பகுதியான வடகவுஞ்சியிலிருந்து செம்பரான்குளத்திற்கு வனப்பகுதி வழியாக சுற்றுலாப்பயணிகள் சிலர் சென்றுள்ளனர். இதனை புகைப்படம் எடுத்து சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள், கொடைக்கானல் காவல் துறைக்குத் தகவல் அளித்தனர்.
தகவலின்பேரில், அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட காவல் துறையினர், வடிவேல் , கோபிநாத், முத்து , ஆனந்த், வினோத்குமார் , மணிகண்டன், விஜயராகவன், கண்ணன், ஜெயபிரகாஸ், பிருத்விராஜ் ஆகிய 10 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவர்கள் பயன்படுத்திய வாகனத்தைப் பறிமுதல் செய்தனர்.
அத்துமீறி வனப்பகுதிக்குள் சுற்றுலாப்பயணிகள் சிலர் செல்வதற்கு வனத்துறையே முக்கியக் காரணம். கொடைக்கானல் மலைப்பகுதியில் 8 வனச்சரகங்களில் 4 வனச்சரக அலுவலர்கள் மட்டுமே இருப்பதாகவும் 3 ஆண்டுகளாக உதவி வனப்பாதுகாவலர் பணியிடம் நிரப்பப்படாமல் இருப்பதும் இது போன்ற குற்றங்கள் நடைபெற்று வருவதாகவும் உள்ளூர் வாசிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.