தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைந்துள்ள கரோனா சிறப்பு சிகிச்சை வார்டில் அடிக்கடி செல்போன் திருட்டு நடைபெறுவதாக தகவல் வந்தது. அதன்படி, தருமபுரி நகர காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சிறப்பு சிகிச்சை பிரிவில் நோயாளிகள் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது இளைஞர் ஒருவர் அப்பகுதியில் செல்போன் திருடும்போது, ரோந்து பணியில் ஈடுபட்ட காவல் துறையினர் அவரை கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் சேலம் ஐந்து ரோடு பகுதியில் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த முருகன் மகன் ராஜ்குமார் (21) என்பது தெரியவந்தது. மேலும் சேலம் நகைக்கடை ஒன்றில் கூலிவேலை செய்து வந்ததாகவும், நேற்று (டிச. 04) மாலை 7 மணியளவில் தருமபுரிக்கு வந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை வார்டுக்கு சென்று 3 செல்போன்களை திருடியது தெரியவந்தது. அதன்பின்னர் காவல் துறையினர் அவரிடமிருந்து 3 செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர். பின் ராஜ்குமார் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இதையும் படிங்க: திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பெண்ணிடம் பணம், நகை பறிப்பு!