கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. அலுவலகத்திற்கு நேற்று தொலைபேசியில் அழைத்த அடையாளம் தெரியாத நபர், தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் உள்ள தட்சிணகாசி காலபைரவர் கோயில், சென்னகேசவ பெருமாள் கோயில், அதியமான்கோட்டை காவல் நிலையம் உள்ளிட்ட இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறி விட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.
இதனையடுத்து ஐ.ஜி. அலுவலக காவல் துறையினர், தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தனர். பின்பு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன் உத்தரவின்பேரில் துணைக் காவல் கண்காணிப்பாளர் ராஜ்குமார், உள்ளிட்ட காவல்துறையினர் அந்த நபர் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறிய இடங்களுக்கு நேரில் சென்றனர்.
இதையடுத்து, மோப்ப நாய், வெடிகுண்டு செயல் இழக்கச் செய்யும் நிபுணர்களை வரவழைக்கப்பட்டு அங்கு சோதனை செய்தபோது வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. பின்னர் ஐ.ஜி. அலுவலகத்திற்கு வந்த தொலைபேசி எண் குறித்தும், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்தும் காவல் துறையினர் விசாரணை நடத்தினா்.
காவல் துறையினரின் விசாரணையில் மிரட்டல் விடுத்தவர் ஈரோடு மாவட்டம் மேட்டுப்பாளையம் பாலாஜி நகரை சோ்ந்த ரங்கராஜன் என்பவரின் மகன் சந்தோஷ்குமார் (31) என தெரியவந்தது. இது குறித்து சந்தோஷ்குமாரை ஈரோடு தெற்கு காவல்நிலைய காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
இதையும் படிங்க : காரில் சிக்கிய 105 லிட்டர் கள்ளச்சாராயம்: ஒருவர் கைது