தர்மபுரி: இலக்கியம்பட்டி கிராம ஊராட்சிக்கு உட்பட்ட எமக்குட்டியூர் செல்லும் சந்திப்பில் 69 லட்சம் ரூபாய் செலவில் ஓரடுக்கு பேருந்து நிறுத்த நிழற்கூடம் அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இந்த நிழற்கூடம் கட்டப்படவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மரு. டி.என்.வி. செந்தில்குமார் கலந்துகொண்டு கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த டி.என்.வி. செந்தில்குமார், “இரண்டரை வருடங்களாக கரோனா தொற்று பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி தற்போது வழங்கப்பட்டுள்ளது. முதல் பணியாக பேருந்து நிழற்குடம் அமைக்க அனுமதி பெறப்பட்டுள்ளது. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இதேபோன்ற பேருந்து நிறுத்தங்கள் அரூர் மற்றும் மேட்டூர் பகுதியில் நிறுவப்படவுள்ளன.
இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் ஒரு நிழற்கூடம் என்ற வகையில் ஏற்பாடு நடைபெற்று வருகிறது. புது மாதிரியான வகையில் பலநவீன வசதிகளுடன் இந்த பேருந்து நிறுத்தம் அமைக்கப்படும். இந்தியாவிலும் உலக அளவிலும் எந்த பகுதியிலும் இல்லாத பேருந்து நிறுத்தம் தர்மபுரியில் அமைக்கப்படவுள்ளது. நீண்டநாள் ஆலோசனைக்குப் பிறகு இந்த பேருந்து நிறுத்தம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதில் என்னென்ன வசதிகள் இருக்கும் என்பது ரகசியம், அதனை இப்போது வெளியிட முடியாது. ஆனால், மக்கள் பயன்பாட்டிற்கு வரும்போது பெரிய அளவில் வரவேற்பு இருக்கும். முதல் தளத்துடன் குளிர்சாதன வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கூடிய பேருந்து நிறுத்தமாக இந்த பேருந்து நிறுத்தம் அமைக்கப்படவுள்ளது. மின் இணைப்புப் பெறாமல் முழுக்க முழுக்க சோலார் வசதியுடன் பராமரிப்பு செலவு போன்றவை வருவாய் ஈட்டும் வகையில் விளம்பர வகையில் வருவாய் ஈர்த்து சிறப்பாக செயல்படுத்துப்படவுள்ளது” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளிலும் சிறு விளையாட்டு அரங்கங்கள்: மு.க.ஸ்டாலின்