தர்மபுரி: புறநகர் பேருந்து நிலையத்தில் திருப்பத்தூருக்கு பயணம் மேற்கொள்ள பாலக்கோடு பகுதியை சேர்ந்த மணிமேகலை என்ற இளம்பெண் பேருந்தில் ஏறியுள்ளார். அப்பொழுது, தனது கையில் வைத்திருந்த பேக்கிலிருந்த பணம் 2 ஆயிரத்து 800 ரூபாய், செல்போன் திருடு போயுள்ளது. இதையடுத்து பேருந்து நிலைய காவல் மையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
தர்மபுரி நகர காவல் துறையினர், பேருந்தில் ஏறிய, இறங்கிய பயணிகளிடம் சோதனை செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது பெண் ஒருவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த காவல் துறையினர், அவரிடம் சோதனை செய்ததில், திருடு போன செல்போன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த பெண் வேலூர் மாவட்டம் கவுந்தம்பாடியை சேர்ந்த பவுனம்மாள் (55) என்பது தெரியவந்தது. இந்த பெண், சில பெண்கள் சேர்ந்து பேருந்து நிலையங்களுக்கு வரும் பயணிகளிடம் நகை, பணம் உள்ளிட்ட பொருட்களை திருடிவந்தது விசாரணையில் தெரியவந்தது.
தர்மபுரி பேருந்து நிலையத்திற்கு வந்த ஒரு சிலர் தப்பி சென்ற நிலையில், பவுனம்மாளை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : ஒகேனக்கல் நீர்வரத்து 22 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு!