ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் முறையாக விநியோகிக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளரும், தருமபுரி மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான சந்தோஷ் பாபு இன்று தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சென்று பார்வையிட்டு பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்தார். மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற அலுவலர்கள் அளவிலான ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு, அலுவலர்களின் செயல்பாடுகளைக் கேட்ட பின்னர் அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அரசுத் துறைச் செயலாளர் சந்தோஷ் பாபு, ‘பருவமழை குறைவு காரணமாகத் தண்ணீர் பற்றாக்குறை சில இடங்களிலும் உள்ளது. முதலமைச்சரின் ஆய்வுக் கூட்டத்தில் 32 மாவட்டங்களில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள், மாவட்டத்தில் உள்ள பிரச்சினைகள், மாவட்ட நிர்வாகம் பொது மக்களுக்கு அரசின் நலத் திட்டங்களைக் கொண்டு செல்வது குறித்து ஆய்வு செய்ய அறிவுறுத்தினார்.
அதன்படி இன்று தர்மபுரி மாவட்டத்தில் நகராட்சி, ஊராட்சி பகுதிகளில் ஆய்வு செய்ததில் மாவட்ட நிர்வாகம் கடந்த மூன்று ஆண்டுகள் மழை குறைவு காரணமாகக் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் என முன்பே கணித்து, குடிநீர் பற்றாக்குறையைத் தீர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையினால் இங்குக் குடிநீர் பிரச்சனை குறைவாக உள்ளது.
.குடிநீர் பிரச்னையை தீர்க்க 1500க்கும் மேற்பட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பஞ்சப்பள்ளி பகுதியில் அணை நீர்மட்டம் இல்லாத காரணத்தால் நிலத்தடி நீர்மட்டத்தைக் கொண்டு பாலக்கோடு பகுதிக்குத் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் பாலக்கோடு பகுதியில் 3 கோடி மதிப்பில் குடிநீர் பணிகள் மேற்கொள்ள அனுமதி கேட்டு முதலமைச்சருக்குப் பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் அனுமதி கிடைத்தவுடன் பணிகள் தொடங்கப்படும்’ என்று தெரிவித்தார்.