தர்மபுரி: பாலக்கோடு அருகே பட்டா மாறுதலுக்கு 2,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த திம்மம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி மூர்த்தி (24). இவர் தனது பாட்டி பெயரில் உள்ள விவசாய நிலத்தை தன் பெயரில் பட்டா மாறுதல் செய்து தரக் கேட்டு ஜா்தலாவ் கிராம நிர்வாக அலுவலர் செல்வம் என்பவரிடம் விண்ணப்பித்துள்ளார். விண்ணப்பித்த போது 3 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே பட்டா மாறுதல் கிடைக்கும் என செல்வம் தெரிவித்துள்ளார்.
மூர்த்தி முன்பணமாக 500 ரூபாய் வழங்கியுள்ளார். மேலும் லஞ்சம் தர விரும்பாத மூர்த்தி, தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசாரின் உதவியை நாடியுள்ளார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் 2,000 ரூபாய் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை மூர்த்திக்கு வழங்கியுள்ளனர். இதனையடுத்து இன்று மூர்த்தி கிராம நிர்வாக அலுவலர் செல்வத்திற்கு லஞ்சப் பணமாக அதை வழங்கியுள்ளார். இதனை மறைந்திருந்து கண்காணித்த லஞ்ச ஒழிப்பு போலீசார், லஞ்சம் வாங்கிய மூர்த்தியிடம் இருந்த ரசாயனம் தடவிய 2,000 ரூபாய் பணத்தை கைப்பற்றி அவரை கைது செய்தனா்.