தர்மபுரி: அரூர் தனியார் திருமண மண்டபத்தில், மதிமுக முன்னாள் மாவட்ட அவைத்தலைவர் மறைந்த சாமி கண்ணுவின் திருவுருவப்பட திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு கொண்டார்.
அப்போது பேசிய வைகோ, “கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சம்பவத்தை கேள்விப்பட்டவுடன் முதலமைச்சர் ஸ்டாலின், அடுத்த ஒரு மணி நேரத்தில் டிஜிபியை அனுப்பி வைத்து, தடயங்களை சேகரித்து, இறந்த நபருடன் பழகிய நபர்களை கைது செய்துள்ளனர்.
சம்பவம் குறித்து என்ஐஏ விசாரிக்கட்டும் என்று முதலமைச்சர் சொல்லி இருக்கிறார். நமது காவல்துறையினர் குறைந்தவர்கள் அல்ல. இன்றும் ஸ்காட்லாந்து யார்டு காவல்துறைபோல செயல்படுபவர்கள்தான். எந்த சட்டத்தில் நானும் கணேச மூர்த்தியும் கைது செய்யப்பட்டு 19 மாதங்கள் சிறையில் இருந்தோமோ, அந்த சட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சமூக நல்லிணக்கத்திற்கு ஆபத்து வந்து விடக்கூடாது. யார் தவறு செய்தாலும், தவறு செய்ய யார் காரணமாக இருந்தாலும் சட்டத்தின் கரம் கொண்டு அடக்க வேண்டும். சமுக நல்லிணக்கத்தை உடைக்கிறோம் என்று சொல்லி திராவிட இயக்கத்தின் கொள்கைக்கு வெடி வைக்கலாம் என்று கருதுகிறார்களே, அது ஒரு போதும் நடக்காது.
திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகள் சமூக நல்லிணக்கம், சமூக நீதி, ஹிந்தி எதிர்ப்பு. உலகின் பல நாடுகளில் காந்தியின் படத்தை வழிபடுகிறார்கள், பாராட்டுகிறார்கள். மத்தியபிரதேசத்திலும் உத்தரபிரதேசத்திலும் பல்லாக்கு செய்து தேர் செய்து அதில் ஒரு உருவத்தை வைத்து கோட்சே வாழ்க! காந்தி ஒழிக! என்று ஊர்வலம் சென்றார்கள்.
ஏன் மனம் கொதிக்கவில்லை? மகாத்மா காந்தியை ஒழிக என சொல்லி, கோட்சேவின் பெயரை வாழ்க என்று சொல்கிறார்களே, நாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்?” என்றார்.
இதையும் படிங்க: கோவை கார் சிலிண்டர் வெடிப்பு...நெல்லை மத குருக்களிடம் விசாரணை