தருமபுரி: தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த முத்தம்பட்டி ஆஞ்சநேயர் கோயில் செல்லும் வழியில் பூதனஹள்ளி வனப்பகுதியில் கல்குவாரி ஒன்று இயங்கி வந்தது. தற்போது இந்த குவாரி இயங்கவில்லை. நேற்று (ஜூலை 19)கல்குவாரி அருகே இரண்டு சடலங்கள் இருப்பதைக் கண்டு கால்நடை மேய்ச்சலுக்கு சென்றவர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற அதியமான் கோட்டை காவல் துறையினர் சடலங்கள் இருக்கும் இடத்தை ஆய்வு செய்தனர்.
இருவரின் சடலம் 10 மீட்டர் இடைவெளியில் இருந்துள்ளது. மேலும் சடலத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் கேரள பதிவெண் கொண்ட சொகுசு கார் ஒன்றும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு பேரின் சடலத்தில் லேசான காயங்கள் இருந்துள்ளது. இதனையடுத்து அங்கு சென்ற தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.கலைச்செல்வன் நேரில் ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து கார் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில் இருவரும் கேரளாவை சேர்ந்த சிவகுமார் மற்றும் நிக்கோல் குருஸ் என்பது தெரியவந்தது. இந்நிலையில் இது தற்கொலையா செய்து கொண்டார்களா அல்லது யாரேனும் கொலை செய்துவிட்டு, வனப்பகுதியில் வீசிவிட்டு சென்றனரா? என்பது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனையடுத்து இருவரின் உறவினர்களுக்கு காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் சடலங்களை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க:குடிபோதையில் மகன் மீது குழவி கல்லை போட்டு கொலை செய்த தந்தை