தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் பஞ்சப்பள்ளி வழியாக கர்நாடக மாநிலத்திலிருந்து மதுபாட்டில்களை வாங்கி மாரண்டஅள்ளி பாலக்கோடு பகுதிகளில் விற்பனை செய்துவருகின்றனர். தர்மபுரி மாவட்ட காவல் துறையினர் சோதனை சாவடிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு மது பாட்டில்கள் கொண்டு செல்பவர்களை கைதுசெய்து வருகின்றனர்.
இந்நிலையில் சில இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் கிராமப்பகுதிகளில் வழியாக மது பாட்டில்கள் கடத்தி வருவதாக மாரண்டஅள்ளி காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
இதனையடுத்து தீவிர வாகன சோதனையின்போது இரு சக்கர வாகனத்தில் இருவர் கர்நாடக மாநில மதுபானங்கள் கடத்தி வந்ததைக் கண்டறிந்தனர். இதையடுத்து மதுபாட்டில்கள் கடத்திவந்த விஜய், கார்த்திக் என்ற இரண்டு இளைஞர்களை கைதுசெய்து மது பாட்டில்கள், இருசக்கர வாகனத்தை பறிமுதல்செய்தனர்.
கரோனா ஊரடங்கு காரணமாக தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு உள்ளதால் சிலர் கர்நாடக மதுபானங்களை குறைந்த விலைக்கு வாங்கிவந்து அதிக விலைக்கு விற்று லாபம் பார்ப்பதால் மதுபானங்கள் கடத்தலில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.