தர்மபுரி: ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை தொடர் விடுமுறை காரணமாக வெளி மாநில, வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல்லுக்குச் சுற்றுலா வந்திருந்தனர்.
ஒகேனக்கல் மெயின் அருவி உள்ளிட்டப் பகுதிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள், பரிசல் ஓட்டிகள் உதவியுடன் சென்று ஒகேனக்கல் சினிஅருவியில் குளித்து மகிழ்ச்சியடைந்தனர்.
சினி அருவிப் பகுதிக்குச் செல்ல பரிசலில் நான்கு பேருக்கு 750 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பரிசல் மூலமாக சென்று சினிஅருவி பகுதிகளில் குளிக்க அனுமதிக்கின்றனர்.
சுற்றுலாப் பயணிகள் குளிக்கும் வரை காத்திருக்க 200 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை, பரிசல் ஓட்டிகள் பெற்றுக்கொண்டு சுற்றுலாப் பயணிகளை குளிக்க அனுமதிக்கின்றனர்.
பணம் கொடுத்து அருவில் குளிக்கும் அவல நிலை
இலவசமாக மெயின் அருவில் குளிக்க வந்த சுற்றுலாப் பயணிகள் 750 ரூபாய் செலவு செய்து ஒகேனக்கல்லில் குளிக்கும் அவல நிலையில் உள்ளனர். பலர் வெகு தூரத்திலிருந்து ஆயிரக்கணக்கில் பணம் செலவு செய்து ஒகேனக்கல் வந்தநிலையில், சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி மறுப்பால், வேறு வழியின்றி 750 ரூபாய் செலவு செய்து குளித்துச் செல்வதாகத் தெரிவிக்கின்றனர்.
ஒகேனக்கல்லில் நீர்வரத்து காரணமாக அடிக்கடி குளிக்கத் தடை விதிக்கப்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் பெரும் ஏமாற்றமடைகின்றனர்.
நீர்வரத்து அதிகமாக வரும் காலங்களில் பாதுகாப்பாக குளிக்கும் வகையில் காவிரி ஆற்றில் பாதுகாப்பாக குளிக்க இடத்தை ஏற்படுத்தி கொடுத்தால், சுற்றுலாப் பயணிகள் அப்பகுதியில் குளித்து மகிழ்ச்சியடைவார்கள். ஆனால், எந்தவித முன்னேற்பாடும் இல்லாததால் ஏமாற்றத்தில் திரும்பும் சூழ்நிலை சுற்றுலாப்பயணிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 19 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு