தர்மபுரி: புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ஒகேனக்கல், தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் அமைந்துள்ளது. ஒகேனக்கல்லில் உள்ள நீர்வீழ்ச்சி தென்னகத்தின் நயாகரா என்று அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல்லில் உள்ள அருவியில் குளித்தும் பரிசல் மூலம் பயணம் செய்தும் காவிரியின் அழகை ரசிப்பது வழக்கம்.
அநியாய கட்டண வசூல்: கோடை விடுமுறை காலத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல் வருவது வழக்கம். பல பள்ளிகளில் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பரிசலில் பயணம் செய்ய நான்கு நபர்களுக்கு ரூ.750 அரசு கட்டணம் நிர்ணயித்துள்ளது.
இக்கட்டணத்தை தான் அவர்கள் வசூல் செய்யவேண்டும். சுற்றுலாப் பயணிகள் ரூ.750 கட்டணம் செலுத்தி அதற்கான தொகை பெற்றுக் கொண்டு பரிசலில் செல்லும் பொழுது பரிசல் ஓட்டிகள் ரூ.2,750 கொடுக்க வேண்டுமென கேட்பதாகவும் அவ்வாறு ரூ.2,750 கொடுத்தால் மட்டும் தான் பரிசலில் அழைத்துச் செல்வோம் என விடாப்பிடியாக சுற்றுலாப் பயணிகளை மிரட்டுவதாகக் குற்றம் சாட்டுகின்றனர்.
சில சுற்றுலாப் பயணிகள் குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றும் வகையில் இவர்கள் விதிக்கும் கட்டணத்தைச் செலுத்தி பரிசலில் பயணம் செல்கின்றனர். வழக்கத்தைவிட மூன்று மடங்கு கட்டணத்தை தங்களுக்கு தாங்களாகவே பரிசல் ஓட்டிகள் உயர்த்திக்கொண்டு சுற்றுலாப்பயணிகளை ஏமாற்றி வருகின்றனர். இதனைக் கண்காணிக்க அலுவலர்கள் யாரும் இல்லாத காரணத்தால் இவர்கள் இஷ்டப்படி பரிசில் பயணங்கள் நடைபெறுகிறது.
நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை: பரிசலில் பயணம் செய்பவர்களுக்குப் பாதுகாப்பு மற்றும் கட்டணங்களைக் கண்காணிக்க மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் சுற்றுலாப் பயணிகள் விரக்தி அடைந்துள்ளனர். மேலும், சாதாரண நாட்களில் மீன் விலை கிலோ 150 ரூபாய்க்கு விற்பனையாகிறது ஆனால் கூட்டம் அதிகரித்ததால் ஒரு கிலோ மீன் 700ரூபாய் வரை விலை உயர்த்தி விற்கின்றனர். மசாஜ் செய்வதற்கு ரூ.100 கட்டணம் நிர்ணயித்த நிலையில் மசாஜ் செய்வதற்கு ரூ.700 வசூல் செய்வதாகவும் தங்கும் விடுதிகளில் கட்டணம் 5 மடங்கு வரை உயர்ந்துள்ளதாகவும் சுற்றுலாப் பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
குறிப்பிட்டத் தொகையில் கோடை விடுமுறையை குதூகலமாகக் கொண்டாட ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இத்தகைய கட்டணக் கொள்ளைகள் ஏமாற்றத்தையே பரிசாக கிடைப்பதாகவும், தருமபுரி மாவட்ட நிர்வாகம் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு சரியான கட்டணங்களை நிர்ணயித்து அதை கண்காணித்து பொதுமக்கள் சுற்றுலாவை மகிழ்ச்சியாகக் கொண்டாட ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது சுற்றுலாப் பயணிகளின் வேண்டுகோளாக உள்ளது.