தருமபுரி மாவட்டம் பாலக்கோடு, மாரண்டஅள்ளி, வெளிச்சந்தை பாப்பாரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் விவசாயிகள் தக்காளி சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையில் தற்போது தக்காளி வரத்து அதிகரித்ததன் காரணமாக, அதன் விலை கடந்த இரு வாரங்களாகத் தொடர்ந்து குறைந்து வருகிறது. இன்றைய(நவ.4) நிலவரப்படி தக்காளியின் விலை ஒரு கிலோ 4 ரூபாய்க்கு விற்பனையானது. சென்ற மாதம் தக்காளி விலை கிலோ 40 ரூபாய்க்கு விற்பனையானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திடீர் விலை குறைவு காரணமாக தக்காளி சாகுபடி செய்த விவசாயிகள் கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
தக்காளி வரத்து அதிகரிக்கும் சமயங்களில் தக்காளியிலிருந்து மதிப்புக்கூட்டிய பொருள்கள் தக்காளி சர்ஸ், தக்காளி ஜாம், தக்காளி ஜூஸ் போன்றவை தயாரிக்க தமிழ்நாடு அரசு நடமாடும் வாகனத்தை அறிமுகம் செய்தது. ஆனால் தற்போது அது எங்கிருக்கிறது என்றே தெரியாமல் உள்ளது.
மேலும் விவசாயிகள் தக்காளி விலை குறைவு காரணமாக அதனை ஒரு சில இடங்களில் சாலை ஓரம் கொட்டிவிட்டுச்செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.