தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தலைமையில் குடிநீர் வினியோகம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் தவிர்த்து அந்தப் பகுதியில் உள்ள உள்ளூர் நீர் ஆதாரங்களை மேம்படுத்தி மக்களுக்கு தேவையான குடிநீர் வழங்குவது தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக காவிரியில் வினாடிக்கு 3லட்சம் கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. இந்த தண்ணீரானது செந்நிறமாகவும், தூசுகள் கலந்தும் வருவதால் அதனை சுத்திகரிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் அதிக தண்ணீர் வரத்து காரணமாக சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டுள்ளது.
இன்று மாலை முதல் தண்ணீர் வரத்து குறைந்துள்ளதால், மீண்டும் சுத்திகரித்து வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பணிகளை மேற்கொள்ள அந்தந்த பகுதி அலுவலர்களுக்கு தேவையான அனுமதி வழங்கப்பட்டுள்ளது" என்றார்.