ஐதராபாத்: செர்பியாவை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச், 2025 டென்னிஸ் சீசனுக்கான தனது பயிற்சியாளர் குறித்த அறிவிப்பை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சி மற்றும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளார். கடந்த கிராண்ட்ஸ்லாம் தொடரில் தனக்கு எதிராக விளையாடிய இங்கிலாந்து வீரர் ஆண்டி முர்ரேவை தனது பயிற்சியாளராக நோவக் ஜோகோவிச் நியமித்துள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரில் பங்கேற்க திட்டமிட்டுள்ள உலகின் நம்பர் 2 வீரரான நோவக் ஜோகோவிச், இங்கிலாந்தின் ஆண்டி முர்ரேவை தனது புதிய பயிற்சியாளராக அறிவித்துள்ளார். அனுபவம் வாய்ந்த டென்னிஸ் வீரரான ஆண்டி முர்ரே சமீபத்தில் நடந்து முடிந்த பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு சர்வதேச டென்னிசில் இருந்து ஓய்வு பெற்றார்.
ஜனவரி மாதம் மெல்போர்னில் நடைபெற உள்ள ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரில் ஜோகோவிச்சுடன் இணைந்து ஆண்டி முர்ரே பணியாற்ற உள்ளார். இது தொடர்பாக ஜோகோவிச் கூறுகையில், எனது மிகப் பெரிய போட்டியாளர்களில் ஒருவரை, இந்த முறை எனது பயிற்சியாளராக பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
He never liked retirement anyway. 🙌 pic.twitter.com/Ga4UlV2kQW
— Novak Djokovic (@DjokerNole) November 23, 2024
இருவரு தங்களது கடந்த விளையாட்டுகள் குறித்து கலந்து உரையாடிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக 2011, 2013, 2015, 2016 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களின் இறுதிப் போட்டிகளில் இருவரும் நேருக்கு நேர் மோதி உள்ளனர். ஆனால் அனைத்து போட்டிகளிலும் ஜோகோவிச்சே வெற்றி வாகை சூடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 2025ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் வரை ஆண்டி முர்ரே - நோவக் ஜோகோவிச் கூட்டணி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 20 ஓவர் கிரிக்கெட்டில் வரலாறு படைத்த ஹர்திக் பாண்ட்யா! என்னென்ன சாதனைகள் தெரியுமா?