அரூரில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், “தமிழ்நாட்டில் கல்லூரிகளை பொருத்தவரையில், அனைத்து கல்லூரிகளுக்கும் தண்ணீர் வசதி போதிய அளவு செய்து தரப்பட்டுள்ளது. மேலும், தண்ணீர் பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டால், அதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கல்லூரிகளில் பணியாற்ற 2009ஆம் ஆண்டு வரை எம்.பில் முடித்தவர்கள் பணியாற்றலாம் என்று இருந்தது. ஆனால் 2009க்கு பிறகு யுஜிசி வழிகாட்டுதல்படி ஸ்லெட், நெட் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே கல்லூரிகளில் பேராசிரியர்களாக, விரிவுரையாளர்களாக பணியாற்ற முடியும். இதற்கு தனி நபர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். அதனால் கல்லூரிகளில் தகுதியுள்ளவர்களை நியமிக்க வேண்டும் என்று உத்தரவு வந்துள்ளது. இதுகுறித்து தற்போது ஆய்வு செய்து வருகிறோம். தமிழ்நாடைப் பொருத்தவரை ஸ்லெட், நெட், பிஎச்டி தேர்ச்சி பெற்றவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். எனவே தகுதி உள்ளவர்கள் இல்லை என்ற நிலை தமிழ்நாட்டில் இல்லை.
தமிழ்நாடு கல்லூரிகளில் காலியாக உள்ள பேராசிரியர்கள் நியமனம் டிஆர்பி மூலமாகவே நிரப்பப்படுகிறது. ஏற்கனவே பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1,058 காலிப்பணியிடங்கள் டிஆர்பி மூலமாக நிரப்பப்பட்டது. இதில் சில குளறுபடிகள் ஏற்பட்டதால், அதனை சரிசெய்வதற்காக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதனால் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. தற்பொழுது பாலிடெக்னிக் கல்லூரியில் காலியாக உள்ள பணியிடங்களை டிஆர்பி மூலம் விரைந்து நிரப்புவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றார்.
மேலும் அவர், கலை-அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை டிஆர்பி மூலம் நிரப்புவதற்கு அரசு முனைப்போடு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தர் பணியிடங்கள் தற்போது நிரப்பப்பட்டு வருகிறது. கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்டவரின் பதவி காலம் முடிந்த பிறகு, துணைவேந்தர் நியமிப்பதற்கான வழிவகைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஆகவே கூடிய விரைவில் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தர் நியமிக்கப்படுவார்” என கூறினார்.