தர்மபுரி மாவட்டம் அருகேயுள்ள அதியமான்கோட்டையில் கடந்த பிப்.01ஆம் தேதி இளைஞர் ஒருவர் தலை, உடல் சிதைந்த நிலையில் இறந்து கிடந்தார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற நகர காவல்துறையினா் உயிரிழந்தவரின் உடலை மீட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில், உயிரிழந்து கிடந்தவர் பென்னாகரம் அருகேயுள்ள சுண்ணாம்புகாரத் தெருவைச் சேர்ந்த சுரேஷ்குமார் (42) என்பதும், இவருக்கு சொந்தமாக 5 லாரிகள் இருந்ததும் தெரியவந்தது. கரோனா பொதுமுடக்க காலத்தில் இந்த லாரிகளுக்கான பைனான்ஸ் தொகையை கட்டுவதில் சுரேஷ்குமார் சிரமப்பட்டுள்ளதாக தெரிகிறது. சுரேஷ்குமாரிடம் ஒர்க்கிங் பார்ட்னராக அரவிந்த்குமார் என்பவர் வேலைபார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், லாரி உரிமையாளர் இறந்து விட்டால், பைனாஸ் தொகையில் தள்ளுபடி கிடைக்கும் என்று அரவிந்த்குமாருக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து, லாரிகளையும் தனக்கு சொந்தமாக்கி கொள்ள ஆசைப்பட்ட அரவிந்த்குமார், இது குறித்து தனது நண்பர்களான எல்லப்பராஜ் (21), கோவிந்தராஜ் (28), கார்த்தி (25) ஆகியோரிடம் தெரிவித்து, கடந்த மூன்று மாதங்களாக சுரேஷ்குமாரை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார்.
கடந்த பிப்.01ஆம் தேதி அரவிந்த்குமார் சுரேஷ்குமாருக்கு மது வாங்கி கொடுத்து, மதுபோதையில் அதியமான்கோட்டை பகுதியில் உள்ள சாலையில் கார்த்திக் என்பவா் மூலம் அவர் மீது கார் மோதி கொலை செய்ததது தெரிய வந்துள்ளது. அதைத்தொடர்ந்து, காவல் துறையினர் அரவிந்த்குமார், எல்லப்பராஜ், கோவிந்தராஜ் ஆகிய மூவரையும் கைது செய்து, கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட காரை பறிமுதல் செய்ததுடன், தலைமறைவாக உள்ள கார்த்தியை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: சகோதர்களிடையே மோதல்: கீழே விழுந்த அண்ணன் உயிரிழப்பு!