தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு திருமலை வாடி பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (29). இவருக்கு திருமணம் ஆகாத நிலையில் விவசாயம் செய்துவந்துள்ளார். செவ்வாய்க்கிழமை (ஏப். 27) அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் ராமச்சந்திரன் வீட்டிற்குச் சென்று ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே கே.என்.பாளையத்தைச் சேர்ந்த கணேசன் என்பவரிடம் அதிசய சொம்பு ஒன்று உள்ளது. அந்த சொம்பு அருகே டார்ச் லைட் ஆன் செய்துகொண்டு சென்றால் தானாக லைட் அணைந்து விடும்.
ஒரு சொம்பு 1.5 லட்சம்
எனவே, அதனை வாங்கிக் கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார். அதனை ஆர்வமுடன் பார்க்க தனது நண்பர்களான முனிரத்தினம், சென்றாயன் ஆகியோர்களுடன் ராமச்சந்திரன் கார் மூலம் கணேசன் வீட்டிற்கு வந்துள்ளார். வரும் வழியில் டி.ஜி.புதூரில் அவர்களுக்குத் தெரிந்த சிவாஜி என்பவரும் இவர்களுடன் காரில் சென்றுள்ளார். கணேசன் இவர்களைக் கண்டதும் சொம்பைக் காட்டி ஒரு லட்சத்து, 50ஆயிரம் பணம் கொடுத்து பெற்றுக்கொள்ள வற்புறுத்தியிருக்கிறார்.
இதில் ராமச்சந்திரனுக்கு திருப்தி இல்லாததால் அதனை வேண்டாம் எனக்கூறி விட்டு, ஊருக்குத் திரும்பியபோது ஆத்திரமடைந்த கணேசன், சொம்பை வாங்காமல் சென்றால் காரை ஏற்றிக் கொன்றுவிடுவதாக மிரட்டி தனது காரை எடுத்துக்கொண்டு வேகமாக ஓட்டி வந்துள்ளார்.
காவல் துறையினர் அதிரடி
இதில் பயந்துபோன ராமச்சந்திரன் தங்கள் வந்த காரை வேகமாக ஓட்டிக்கொண்டு சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரியம்மன் கோயில் அருகே தங்கிவிட்டு இன்று (ஏப். 28) பங்களாபுதூர் காவல் நிலையத்தில் ராமச்சந்திரன் எழுத்துப்பூர்வமாக புகார் கொடுத்ததை தொடர்ந்து, காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
பின்னர், அத்திக்கவுண்டன் புதூர் அருகே காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கணேசனைப் பிடித்து கைதுசெய்துள்ளனர். அவரிடமிருந்து ஏமாற்ற பயன்படுத்திய சொம்பு, கார் ஆகியவற்றை பறிமுதல்செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.