தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டை அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்றுவரும் பாகல்பட்டி பகுதியைச் சார்ந்த மாணவர்கள் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கயிறுகளை தங்கள் கைகளில் கட்டி பள்ளிக்குச் சென்றுள்ளனர். கைகளில் மஞ்சள் நிற கயிறு கட்டி வந்த மாணவர்களை, அப்பள்ளியின் இறைவணக்கக் கூட்டத்திலேயே பள்ளி ஆசிரியர்கள் காவேரி, ஜெயவேலன் கடுமையாக அடித்துள்ளனர்.
பள்ளி முடிந்து மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம், ஆசியர்கள் அடித்ததை தெரிவித்துள்ளனர். ஆசிரியர் தாக்குதலால் காயம்பட்ட எட்டாம் வகுப்பு படிக்கும் கிரிஷாந்த், ஒன்பதாம் மாணவர்களான பிரதாப், சத்திய சுந்தரம் ஆகியோர் தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களை தருமபுரி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், பாஜக மாநில செயற்குழு உறுப்பினருமான பாஸ்கர் பார்வையிட்டு நடந்த விவரங்களைக் கேட்டறிந்தார்.
அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த பாஸ்கர் பேசும்போது, பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களை விநாயகர் சதுர்த்தி பண்டிகை கயிறு கட்டி வந்ததற்கு அடித்து துன்புறுத்தி உள்ளனர். ஆசிரியர்கள் திமுகவைச் சேர்ந்தவர்கள் என்றும் அதன் காரணமாக இந்து கடவுள்களை வணங்கும் மாணவர்களை அவர்கள் தாக்கியதாகவும் தெரிவித்தார். மாணவர்களின் மீது தாக்குதல் நடத்தி துன்புறுத்திய ஆசிரியர்களை தருமபுரி மாவட்ட ஆட்சியர் தகுதி நீக்கம் செய்யவேண்டும் என்றும், அவ்வாறு செய்யவில்லை என்றால் பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.