தர்மபுரி: அதியமான்கோட்டை அருகே ஏலகிரியான் கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி கட்டடத் தொழிலாளி. இவருக்கு ஆறு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இவர்களுக்கு ஏலகிரியான் கொட்டாயில் விவசாய நிலம் உள்ளது.
தனிப்பத்திரம்
இது குடும்பத்தில் அனைவருடைய பெயரிலும் கூட்டுப்பட்டாவாக உள்ளது. இதில், விஸ்வநாதன் கட்டட மேஸ்திரிக்கு 70 சென்ட் நிலத்தைப் பிரித்துக் கொடுத்து உள்ளனர். இதற்கு தனிப் பத்திரம் பெற இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பத்திர அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.
அப்போது, பத்திரப் பதிவு அலுவலகத்தில் பத்திரப்பதிவிற்காக சுவாதினச் சான்றிதழ் கேட்டுள்ளனா். பின் அதற்காக அதியமான்கோட்டையின் கிராம நிர்வாக அலுவலரை அணுகி விஸ்வநாதன் சுவாதினச் சான்றிதலுக்கு விண்ணப்பித்துள்ளார்.
சுவாதினச் சான்றிதழ் - லஞ்சம்
சுவாதினச் சான்றிதழ் வழங்க வேண்டுமெனில், கிராம நிர்வாக அலுவலா் சில ஆயிரத்தை பெற்றுக் கொண்டும் சான்றிதழ் வழங்காமல் காலம் தாழ்த்தியுள்ளார். லஞ்சம் பெற்றுக்கொண்ட கிராம நிர்வாக அலுவலா் திடீரென மரணமடைந்துள்ளார்.
தனிப்பத்திரம், பட்டாவிற்கு மறுப்பு
அடுத்து வந்த கிராம நிர்வாக அலுவலரை அணுகிக் கேட்டபோது, ரூ. 30,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். அவருக்கு ரூ. 26,000 வழங்கியுள்ளார்.
பணம் கொடுத்தும், பத்திரப்பதிவு நடைபெறாத விரக்தியில் விஸ்வநாதன் இன்று நவ.9ஆம் தேதி, காலையில் அதியமான்கோட்டை காலபைரவர் கோயில் அருகில் உள்ள 100 அடி செல்போன் டவரில் ஏறி, தனக்கு தனிப்பத்திரம் மற்றும் பட்டா வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
விரக்தியில் தற்கொலை முயற்சி
இல்லையெனில், தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொள்வேன் என்று தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனையறிந்த தர்மபுரி டி.எஸ்.பி அண்ணாதுரை, அதியமான் கோட்டை காவல்நிலைய ஆய்வாளர் ரங்கசாமி, வட்டாட்சியர் செந்தில்குமார், தீயணைப்பு மற்றும் வருவாய்த்துறையினர், செல்போன் டவர் மேல் இருந்த விஸ்வநாதனிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
ஆனால், அவர் எனக்கு உடனடியாக பட்டா வழங்கினால் மட்டுமே கீழே இறங்குவேன், தனது மனைவி ரஞ்சிதம் பெயரில் பட்டா வழங்க வேண்டும் எனக் கூறினார்.
தீயணைப்புத் துறையினர் உயர் மின்கோபுரம் மீது ஏறும் பொழுது யாராவது மேலே ஏறினால் நான் கயிற்றால் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.
மேலும் மேலும் லஞ்சம் - அரசு அலுவலர்கள்
இதனையடுத்து, எஸ்.பி.அண்ணாதுரை, விஸ்வநாதனிடம் பேச்சு வார்த்தை நடத்தியதின் பேரில் விஸ்வநாதன் கீழே இறங்கியுள்ளார்.
விஸ்வநாதன் கூறும்போது, தான் கூலி வேலை செய்து வருவதாகவும்; தன்னுடைய 70 சென்ட் நிலத்திற்கு, தனி பட்டாக்கு விண்ணப்பித்து, பல மாதங்களாக அலைந்து வந்ததாகவும்; இதற்காக கிராமநிர்வாக அலுவலருக்கு ரூ.25,000 ஆயிரம் கொடுத்ததாகவும், அவா் இறந்து விட்டதால் அடுத்து வந்த தற்போது உள்ள அதியமான்கோட்டை கிராமநிர்வாக அலுவலரை அணுகிய போது, ரூ.30,000 பணம் கேட்டதாகவும் தெரிய வந்துள்ளது.
கண்ணீர் சிந்திய கட்டடத் தொழிலாளி
அதற்கு முன்பணமாக 26 ஆயிரம் ரூபாய் கொடுத்ததாகவும்; மீதிப்பணம் தர பணம் இல்லாததால் தான் கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்டுள்ளார்.
அதியமான்கோட்டை கிராம நிர்வாக அலுவலா் ரூ.15,000 ரூபாயை மட்டும் திரும்பக் கொடுத்து விட்டு ரூ.11,000 தரவில்லை என்றும் பத்திரப்பதிவு அலுவலகத்திற்குச் சென்று கேட்டால் ரூ.5,000 லஞ்சம் கேட்பதாகவும், தனது ஆவணங்களை தூக்கி எறிவதாகவும் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பேபி அணை பகுதியில் 15 மரங்கள் வெட்ட கேரள அரசு அனுமதி வழங்கியதால்தான் முதலமைச்சர் நன்றி தெரிவித்தார் - துரைமுருகன்