தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் டி.என்.வி. செந்தில்குமார் கடந்த ஆண்டு மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதி உயர் சிகிச்சை மையம் அமைக்க வேண்டும் என்ற கடிதத்தினை வழங்கினார். இந்நிலையில் அதி உயா் சிறப்பு சிகிச்சை மையம் தொடா்பாக டெல்லியில் பிரதம மந்திரி சுகாதாரப்பாதுகாப்புத்திட்டத்தின் செயலாளரை சந்தித்து அதிஉயர் சிறப்பு மருத்துவமனை மையத்திற்குத்தேவையான விரிவான திட்ட அறிக்கையை தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில்குமார் வழங்கியுள்ளார்.
இத்திட்ட அறிக்கையில் பிரதம மந்திரி சுகாதாரப்பாதுகாப்புத்திட்டத்தின்கீழ் நரம்பியல் துறை, நரம்பியல் அறுவை சிகிச்சை துறை, சிறுநீரகவியல் துறை, புற்றுநோயியல் துறை, குழந்தைகள் அறுவை சிகிச்சை துறை உள்ளிட்ட துறைகளுக்குத்தேவையான படுக்கை வசதிகள், மருத்துவர்கள், கட்டுமானத்தேவைகள் உள்ளிட்ட மிக முக்கிய தேவைகள் குறித்தும்; கூடுதலாக 400 படுக்கை வசதிகளை அதிகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் தர்மபுரி மாவட்டத்தில் இச்சிகிச்சை மையம் அமைக்கப்பட்டால் தர்மபுரி மாவட்ட மக்கள் மிகவும் பயன்பெறும் பயன்பெறுவார்கள் என்றும்; சுகாதார கட்டமைப்புகளில் உள்ள ஏற்றத்தாழ்வை சமன் செய்யும் வகையில் அனைவருக்குமான அதிஉயர் சிகிச்சையினை எளிதில் கிடைக்க செய்யவேண்டும் எனவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.