தருமபுரி நகரப்பகுதி, நான்கு சாலை அருகே உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்கள் ஒன்று கூடுவதைத் தவிர்க்கவும், கடந்த ஏப்ரல் மாதம் நான்காம் தேதி முதல் உழவர் சந்தை செயல்படத் தடை விதிக்கப்பட்டது. இதனால் உழவர் சந்தை மூலம் விவசாயிகள் நேரடியாக பொதுமக்களுக்கு வாகனங்களில் காய்கறிகளை விற்பனை செய்து வந்தனர்.
இந்நிலையில் நான்கு சக்கர வாகனங்கள் மூலம் காய்கறிகளைக் கொண்டு சென்று விற்பனை செய்த விவசாயிகளுக்கு வாகன வாடகை செலுத்தி காய்கறிகளை விற்பனை செய்வதால், லாபம் குறைந்து நஷ்டம் ஏற்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர்.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மாவட்ட ஆட்சியர் 41 நாட்களுக்குப் பிறகு மீண்டும் உழவர் சந்தையை திறந்து, சுழற்சி அடிப்படையில் தினமும் 25 கடைகள் திறக்க அனுமதி வழங்கினார்.
இங்கு 25 விவசாயிகள் காய்கறிகள், பழங்கள், கீரை வகைகளை விற்பனைக்கு வைத்துள்ளனர். காய்கறிகளை வாங்க வரும் பொதுமக்கள் மாஸ்க் அணிந்து வந்தால் மட்டுமே அனுமதி வழங்குகின்றனர்.
காய்கறிகள் மற்றும் பழங்களை வாங்க பொதுமக்கள் தகுந்த இடைவெளியுடன் வரிசையில் நின்று, தங்களுக்குத் தேவையான காய்கறிகளை வாங்கிச் சென்றனர்.
தருமபுரி உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம் சராசரியாக இருந்து வருகிறது. அதன்படி, தக்காளி கிலோ பத்து ரூபாய்க்கும், கத்தரிக்காய் கிலோ 12 ரூபாய்க்கும், வெண்டைக்காய் கிலோ 12 ரூபாய்க்கும், அவரைக்காய் கிலோ 30 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் கிலோ 50 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் கிலோ 15 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு கிலோ 32 ரூபாய்க்கும், கேரட் கிலோ 28 ரூபாய்க்கும்,பூண்டு கிலோ 10 ரூபாய்க்கும், மாங்காய் கிலோ 15 ரூபாய்க்கும் என விற்பனையானது.
தருமபுரி நகரப் பகுதியில் மீண்டும் பழைய இடத்திலேயே உழவர் சந்தை செயல்படத் தொடங்கியதால், இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: வேலையில்லாமல் திண்டாட்டம் - தொழிலாளர்களுக்கு உதவிய ஸ்டாலின்!