தமிழ்நாடு முழுவதும் 43 நாள்களாக மூடப்பட்டிருந்த அனைத்து டாஸ்மாக் கடைகளும் கடந்த 7ஆம் தேதி திறக்கப்பட்டன. அந்த வகையில், தருமபுரி மாவட்டம் முழுவதும் 54 கடைகள் திறக்கப்பட்டு மும்முரமாக மது விற்பனை நடந்தது. பாப்பாரப்பட்டி பகுதியில் ஒரே இடத்தில் அடுத்தத்து மூன்று அரசு மதுபானக் கடைகள் இருக்கின்றன.
அதில் ஒரு மதுபானக் கடையில், நபர் ஒருவர் மூன்று பீர் வாங்கியுள்ளார். பின்னர் இரண்டு பீர் குடித்தும் போதை ஏறாததால், பீர் பாட்டிலில் ஒட்டப்பட்டுள்ள லேபிலை பார்த்துள்ளார். அதில் கடந்தாண்டு 10ஆவது மாதம் பீர் பாட்டில் தயாரிக்கப்பட்டதாகவும், கடந்த மாதம் 26ஆம் தேதியுடன் காலாவாதி ஆகிவிடும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனால் அதிர்சியடைந்த அவர், பீர் பாட்டிலை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளார். இந்தத் தகவல் மாவட்ட நிர்வாகத்தின் காதுகளுக்கு எட்டவே, டாஸ்மாக் மேலாளர் கேசவன், ஆர்டிஒ ஆகியோர் பாப்பாரப்பட்டியில் உள்ள மூன்று கடைகளுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
ஆய்வில் சில நிறுவனங்களின் பீர் பாட்டில்கள் காலாவதியானது தெரியவந்தது. இதனையடுத்து காலாவதியான பீர்களை எடுத்து குடோனுக்கு அனுப்பி வைக்குமாறு கடை ஊழியகளுக்கு அறிவுறுத்தினர். இதேபோல் மாவட்டத்தின் மற்ற மதுபானக் கடைகளிலும் காலாவதியான பீர் உள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.