தருமபுரி மாவட்டம் குரும்பட்டியைச் சேர்ந்த முனியம்மாள் என்பவருக்கு கர்ப்பப்பை கோளாறு காரணமாக தருமபுரி -பென்னாகரம் சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருக்கு வயிற்றுப் பகுதியில் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழல், அறுவை சிகிச்சைக்கு ஓ நெகட்டிவ் ரத்தம் 2 யூனிட் தேவைப்படுவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.இதனையடுத்து முனியம்மாவின் மகன் ராஜு, தனது நண்பர்கள் மூலம் பல இடங்களுக்கு தகவல் தெரிவித்து உள்ளார்.
ரத்தம் கிடைக்காத நிலையில், தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டு வரும் ரத்தம் வங்கியிலும் முயற்சி செய்தார், அங்கும் அந்த வகை ரத்தம் இல்லை என கூறிய நிலையில்,ஒரு நண்பர் முலம் தருமபுரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இந்த வகை ரத்தம் இருப்பதாக கூறி உள்ளார் அதை அறிந்து அங்கு சென்று ராஜு, ரத்த வகை குறித்து கேட்டபோது ஒரு யூனிட் ரத்தம் மட்டுமே உள்ளதாகவும் அதற்கு ரூபாய் 8000 வேண்டும் எனவும் கூறியுள்ளனர். ராஜு ரத்தத்தை குறைந்த விலைக்கு கேட்டுள்ளார். அதற்கு அந்த மருத்துவமனையில் மறுப்பு தெரிவித்து எட்டாயிரம் ரூபாய் கொடுத்தால் மட்டுமே ரத்தத்தை வழங்க முடியும் என தெரிவித்துள்ளனர் .
தாயின் உயிரை காப்பாற்ற பணத்தை பொருட்படுத்தாமல் ஒரு யூனிட் இரத்தத்தை வாங்கிச் சென்றிருக்கிறார். இதேபோல் சேலத்தில் ஒரு யூனிட் ரத்தம் 1500 ரூபாய் கொடுத்து வாங்கி தனது தாயின் அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிய வழிவகை செய்துள்ளார்.ஆனால் உயிர் காக்கும் ரத்தம் இப்படி அதிக விலைக்கு விற்றால் பணம் உள்ளவர்கள் விலை கொடுத்து ரத்தத்தை வாங்க முடியும், ஏழை எளிய மக்கள் அதிக விலை கொடுத்து ரத்தத்தை எப்படி வாங்க முடியும் என்பது அவரின் கேள்வியாக உள்ளது. இச்சம்பவம் சமூக வலைத்தளங்களில் உலா வருவதால் பொதுமக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இதுகுறித்து எந்த ஒரு புகாரும் ராஜு அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.