தர்மபுரி: நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் டி.என்.வி. செந்தில்குமார் மத்திய தரைவழி போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின்கட்கரியை கடந்தாண்டு சந்தித்துப் பேசினார். அப்போது, தேசிய நெடுஞ்சாலை மையப் பகுதிகளில் சோலார் பேனல்கள் அமைத்து அதன் மூலம் மின்சாரத்தை தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை கடிதம் வழங்கினார்.
கடிதம் வழங்கியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக தெரிகிறது. ஆகையால் மீண்டும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடிதம் அனுப்பினார். இதனையடுத்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தின் சார்பில் தேசிய நெடுஞ்சாலையின் மையப்பகுதியில் சோலார் பேனல் அமைத்து சூரிய மின்னாற்றல் மூலம் மின்சக்தி உற்பத்தி செய்ய தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாகத் தர்மபுரி மாவட்டம் ஜிட்டான்ட அள்ளி முதல் தர்மபுரி வரையிலான தேசிய நெடுஞ்சாலை எண் 844-ல் நாடாளுமன்ற உறுப்பினரின் உள்ளூர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் நெடுஞ்சாலையின் மையப்பகுதியில் சோலார் பேனல்களை பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் கிடைக்கும் சூரிய ஆற்றலிலிருந்து மின்னாற்றல் தயாரித்து அதனை வணிக ரீதியாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் இந்தியாவிலேயே முதன் முறையாக தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் செயல்படுத்தப்படவுள்ளது.
இதையும் படிங்க: பணம் செலுத்தினால் மஞ்சப்பை வழங்கும் எந்திரம் நாளை அறிமுகம்