தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது, உங்கரானஅள்ளி கிராமம். தருமபுரி ஒன்றியத்திற்குள்பட்ட இக்கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இக்கிராம வழியாக 18 கிராமங்களுக்கும் செல்லக்கூடிய இந்த சாலைப் பகுதி பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக கிடந்தது.
இந்நிலையில், கடந்த பத்து நாள்களுக்கு முன்பு தனியார் ஒப்பந்தாரர் மூலம் உங்காரனஅள்ளியிலிருந்து ஏமக்குட்டியூருக்கு 38.37 இலட்சம் ரூபாய் மதிப்பில் புதிய தார் சாலை அமைக்கப்பட்டது. தார் சாலை அமைக்கும்போது பழைய சாலையின் மீது தார் கலந்த ஜல்லிகற்களை கொட்டி தரம் இல்லாத சாலை போடும் பணி நடைபெற்றது.
இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் தரமில்லாமல் சாலை அமைத்து வருவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குத் தகவல் தெரிவித்தனர். பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் போடப்பட்ட இந்தச் சாலை பத்து நாள்களிலேயே ஜல்லி கற்கள் பெயர்ந்து காணப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள், நடந்து செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மழை பெய்தால் முற்றிலும் சேதமடைந்து பழைய நிலைக்கே வந்துவிடும் எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனா். தனியார் ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுத்து புதிய சாலை அமைக்க வேண்டும் என அக்கிராம மக்கள் கோரிக்கைவைத்தனர்.
இதையும் படிங்க: 'தமிழ்நாட்டில் இருப்பது என்றும் எனக்கு மகிழ்ச்சியே' - தமிழில் அமித் ஷா ட்வீட்!