தருமபுரி: அரூர் அருகே உள்ள கீரப்பட்டி கிராமம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் பிரசாந்த். இவரது மனைவி கீதா. இவர்களுக்கு முதலில் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. கீதாவிடம் கணவர் பிரசாந்த் மற்றும் அவரது பெற்றோர் வரதட்சணை கேட்டு துன்புறுத்தி உள்ளனர். இதுகுறித்து கடந்த 2 வருடங்களுக்கு முன்பு அரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கீதா புகார் அளித்துள்ளார்.
இதன் அடிப்படையில் கீதா மற்றும் கைக்குழந்தையை அவருடைய தாய் வீட்டுக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்துள்ளனர். பின்னர், சில மாதங்களுக்கு பிறகு மீண்டும் பிரசாந்த் உடன் சேர்ந்து வாழ்ந்த கீதாவுக்கு, இரண்டாவதாகவும் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தை பிறந்து 20 நாட்கள் ஆன நிலையில், மீண்டும் பிறசாந்தின் பெற்றோர், ‘வரதட்சணை கொடுத்தால் மட்டுமே உனது கணவருடன் வாழ முடியும்’ என்று சொல்லி வீட்டை விட்டு வெளியே அனுப்பியதாக தெரிகிறது.
இந்த நிலையில் இதுகுறித்து அரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மீண்டும் கீதா புகார் அளித்துள்ளார். ஆனால் இந்த புகார் மீது சரியாக நடவடிக்கை எடுக்கப்படாததால், இரண்டு குழந்தைகளுடன் அரூர் பேருந்து நிலையத்தில் கீதா தவித்து வந்தார். இதனைப் பார்த்த பொதுமக்கள், அவர்களுக்குத் தேவையான உணவுகளைக் கொடுத்துள்ளனர்.
இந்த விவகாரம், அரூர் காவல் துணை கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷுக்கு தெரியவந்துள்ளது. அவரது உத்தரவின் அடிபப்டையில் மூன்று நாட்களாக பேருந்து நிலையத்தில் குழந்தைகளுடன் தவித்து வந்த கீதாவை பெண் காவலர்கள் மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இது தொடர்பாக அரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாரிடம் கேட்டபோது, "கீதாவின் புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி, வரதட்சனை கேட்டதில் உண்மை இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.
இதையும் படிங்க: நடுரோட்டில் மனைவியை சரமாரியாக கத்தியால் குத்திய கணவர் - வேலூரில் பயங்கரம்