ETV Bharat / state

தருமபுரியில் காரை வழிமறித்து கொள்ளை; கேரளாவைச் சேர்ந்த 9 பேர் கைது - போலீசார் தீவிர நடவடிக்கை! - காரிமங்கலம் தங்கம் கொள்ளை

Nine Kerala persons arrested: தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே, காரை வழிமறித்து 5 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த கேரளாவைச் சேர்ந்த 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Etv Bharatகேரளாவை சேர்ந்த 9 பேர் கைது
Etv Bharatதர்மபுரியில் காரை வழிமறித்து கொள்ளை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 22, 2023, 10:25 AM IST

தர்மபுரியில் காரை வழிமறித்து கொள்ளை

தருமபுரி: கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் பிரசன்னா. இவர் நகைக்கடை நடத்தி வருகிறார். இவர், செப்டம்பர் கடந்த 28ஆம் தேதி கர்நாடகாவில் இருந்து கோவைக்கு நகைகள் வாங்கிக் கொண்டு சென்றுள்ளார். அப்போது, இவரை பின்தொடர்ந்து வந்த கொள்ளை கும்பல் ஒன்று, தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த பூலாம்பட்டி அருகே காரை வழிமறித்து, அவரை கடுமையாகத் தாக்கி 5 கிலோ தங்கம் மற்றும் ரூ.60 லட்சத்தை காருடன் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இதனை அடுத்து, பிரசன்னா காரிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக சேலம் சரக டி.ஐ.ஜி ராஜேஸ்வரி மற்றும் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜேசுதாஸ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், இந்த வழக்கு சம்பந்தமாக கரூர் டி.எஸ்.பி புகழேந்தி கணேஷ் தலைமையில் 10 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடைபெற்று வந்தது. இந்த விசாரணையில், போலீசார் கொள்ளையர்கள் விட்டுச் சென்ற காரை பறிமுதல் செய்து, தொடர் விசாரணை நடத்தினர்.

பின்னர் தனிப்படை போலீசார் கடந்த 20 நாட்களுக்கு மேலாக தீவிரமாக பல்வேறு மாநிலங்களில் செல்போன் தொடர்பு எண்ணை வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சம்பவத்தில் 15 பேர் ஈடுபட்டதும், அனைவரும் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சுற்றித் திரிந்து வந்த நபர்களை 10 தனிப்படையினர் பின் தொடர்ந்து கைது செய்து, அவர்களிடமிருந்து 5 கிலோ 900 கிராம் தங்கம் மற்றும் ரூ.19.50 லட்சம் பணம் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும், கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்த முக்கிய நபர்களான சுஜித், சரத், பிரவீன் தாஸ் ஆகிய மூவரையும் கோயம்புத்தூரில் கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையின் பேரில், கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய சிகாபுதீன், சைனு, அகில், சதீஷ் ஆகியோரை கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து, வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் அந்தோணி மற்றும் சீரியல் மேத்யூ ஆகிய இருவரையும் காவல் துறையினர் சென்னையில் கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கொள்ளையடிக்கப்பட்ட 60 லட்சம் பணத்தில் 13 லட்சம் ரூபாயில், பிஎம்டபிள்யூ கார் வாங்கப்பட்டுள்ளது. அதேபோல், வேறு ஒரு இடத்தில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டபோது ஒரு கார் வாங்கியதும் தெரிய வந்துள்ளது. மேலும், கடத்தலுக்குப் பயன்படுத்திய இரண்டு கார் என மொத்தம் நான்கு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் காவல் நிலையத்திற்கு கோவை மண்டல ஐ.ஜி பவானி மற்றும் சேலம் சரக டி.ஐ.ஜி ராஜேஸ்வரி ஆகியோர் நேரில் சென்று, பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை பார்வையிட்டு, திறம்பட செயல்பட்ட தனிப்படை காவல் துறையினருக்கு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: புதுச்சேரி அமைச்சரவையில் இருந்து சந்திர பிரியங்கா நீக்கம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு அரசிதழில் வெளியீடு!

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.